தடுப்பூசி ஸ்டாக் விவகாரம்... மத்திய அரசின் பேச்சை மதிக்காத மாநில அரசு!
தடுப்பூசி எண்ணிக்கையை வெளியே சொல்லக்கூடாது என மத்திய அரசின் சுகாதாரத்துறை கூறியுள்ளதை ஏற்றிக்கொள்ள முடியாது என தமிழக அமைச்சர் பேட்டி.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசிகள் மத்திய அரசின் மூலமாக மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடுப்பூசி கையிருப்பு, செலுத்தப்பட்டவை உள்ளிட்ட தகவல்களை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிட்டு வருகின்றன.
இதுகுறித்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு நிலை குறித்த தகவல்கள், தரவுகளை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சுற்றறிக்கை இரண்டு நாட்கள் முன்னதாக அனுப்பப்பட்ட போதிலும் தமிழக அரசு தடுப்பூசி தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி கையிருப்பு குறித்து மக்களிடம் சொல்ல கூடாது என்று மத்திய அரசு கூறியிருக்கும் நிலையில் மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பது தான் சரியாக இருக்கும் என தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதனிடையே தமிழகத்திற்கு 85,000 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்திருக்கின்றன.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தடுப்பூசி எண்ணிக்கையை வெளியே சொல்லக்கூடாது என மத்திய அரசின் சுகாதாரத்துறை கூறியுள்ளது. தடுப்பூசி கையிருப்பு குறித்து சொல்லாமல் இருந்தால் மக்களுக்கு தெரியாமல் போய்விடும். மக்கள் தடுப்பூசிக்காக வரிசையில் காத்திருந்து ஏமாறும் நிலை ஏற்படும். தடுப்பூசி குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்வது தான் சிறந்தது.
தமிழகத்திற்கு இதுவரை வந்த தடுப்பூசி டோஸ்கள் 1,01,63,000. போடப்பட்டுள்ள டோஸ்கள் 97,62,957. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.