வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (00:04 IST)

கள்ளச்சாராய சோதனை: பணம், நகைகளை எடுத்ததாக போலீஸ் மீதே விசாரணை

கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற இடத்தில் பணம், நகைகளை எடுத்து சென்ற போலீசார் - சுற்றி வளைத்த கிராம மக்கள்.
 
வேலூர் குருமலை அருகே உள்ள மலை கிராமத்திற்கு கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள், சோதனையின் போது அங்கிருந்த வீடுகளில் சுமார் 8.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகைகளை எடுத்து சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
 
கொரோனா நோய்த் தொற்றின்‌ இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வந்த காரணத்தினால் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளை முடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களின் சட்டவிரோத விற்பனையும், கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனைத் தடுக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
 
கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற இடத்தில் பணம், நகைகளை எடுத்து சென்ற போலீசார் - சுற்றி வளைத்த கிராம மக்கள்
 
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த குருமலையில் உள்ள நச்சுமேடு மலை கிராமத்தில் கள்ளச்சாராயம் தயாரிப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 3 காவலர்கள் நச்சுமேடு மலை கிராம பகுதியில் ஆய்வுக்கு சென்றனர்.
 
அப்பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் தயாரித்தாக குற்றம்சாட்டப்படும் இளங்கோ மற்றும் செல்வம் வீடுகளில் காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது இருவர் வீட்டிலிருந்த சுமார் 1,000 லிட்டர் சாராய ஊறல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அழித்ததாக கூறுகிறார்கள். பின்னர் இளங்கோ மற்றும் செல்வம் ஆகிய இருவரும் வீட்டில் இல்லாததால் காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
 
கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற இடத்தில் பணம், நகைகளை எடுத்து சென்ற போலீசார் - சுற்றி வளைத்த கிராம மக்கள்
 
இந்த சோதனைக்காக அங்கு வந்த காவலர்கள் இளங்கோ, செல்வம் இருவரின் வீடுகளில் இருந்து சுமார் 8.5 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றதாக கூறி அவர்கள் மலையைவிட்டு இறங்க முயன்றபோது தடுத்து நிறுத்தினர்.
 
தகவலறிந்த பாகாயம் காவல் ஆய்வாளர் சுபா சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் எடுத்ததாக கூறப்பட்ட பணம், நகையை இளங்கோ, செல்வம் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளார்.
 
கள்ளச்சாராய சோதனைக்குச் சென்ற இடத்தில் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்து சென்றதாக பொது மக்கள் தெரிவித்த புகாரையடுத்து அரியூர் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்துவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.