1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (18:30 IST)

பொதுமக்களால் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க முடியாத நிலை- அண்ணாமலை

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே, சுமார் 1600 அடி உயரத்தில் அமைந்துள்ளது நெக்கணமலை மலைவாழ் கிராமம். 7 கிமீ தொலைவுக்கு சாலை வசதிகள் இல்லாததால், பொதுமக்களால் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க முடியாத நிலை நிலவுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே, சுமார் 1600 அடி உயரத்தில் அமைந்துள்ளது நெக்கணமலை மலைவாழ் கிராமம். 7 கிமீ தொலைவுக்கு சாலை வசதிகள் இல்லாததால், பொதுமக்களால் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க முடியாத நிலை நிலவுகிறது. இது அறிந்த திருப்பத்தூர் மாவட்ட  தமிழக பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்தசகோதரர்கள், முறையான அனுமதி பெற்று, நியாயவிலைப் பொருள்களை அந்த மக்களுக்கு லாரிகளில் கொண்டு சென்று வழங்கியுள்ளனர்.

பொதுமக்களுக்கு எந்த வகையிலும் நல்லது நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் திமுகவினர், பொதுமக்களுக்கு நியாய விலைப் பொருள்கள் வழங்குவதைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், தங்களை மீறிப் பொருள்கள் வாங்கினால், அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்காது என்றும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்பட மாட்டாது என்றும் பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.

மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுகவினர், அரசு நலத்திட்டங்களும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியும், கோபாலபுரக் குடும்பம் கொடுக்கிறது என்று நினைத்துவிட்டார்கள் போலும். தாங்களும் மக்களுக்கான பணிகளைச் செய்யாமல், செய்ய முற்படுபவர்களையும் தடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சாலை வசதிகள் இல்லாத கிராமங்களில் சாலை அமைக்க, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கிராம சாலை திட்டத்திற்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகிறது. சாலை வசதி இல்லாததால், ஏற்கனவே இதே பகுதியில் இறந்தவர் உடலைத் தோளில் தூக்கிச் செல்லும் அவலநிலை சமீபத்தில் கண்டோம்.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இந்த கிராமங்களில் சாலைகள் அமைக்கவில்லை என்றால், அந்த நிதி எங்கே செல்கிறது என்று திறனற்ற திமுக அரசு விளக்க வேண்டும்.

மேலும், மக்களுக்கான நலப் பணிகளைத் தடுக்க முற்படும் திமுகவினரை, முதலமைச்சர் திரு  மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் கட்டுப்படுத்துவார்கள் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.