1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (08:00 IST)

உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் மகன் கைதா?

திமுக பிரமுகரும் நெல்லை முன்னாள் மேயருமான உமா மகேஸ்வரி கடந்த 23ஆம் தேதி அவரது வீட்டில் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவருடன் அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர்களும் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச்செயலாளர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயனை போலீசார் விசாரணை செய்து வருவதாக வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், ரகசிய இடத்தில் நடைபெறும் இந்த விசாரணைக்கு பின்னர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை 
 
நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவர்களுக்கும் சீனியம்மாளுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட பகை காரணமாக கொலை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தக் கொலைக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் இந்த செய்தியை சீனியம்மாள் அவர்கள் மறுத்துள்ளார். திமுகவின் நற்பெயரை கெடுக்கும் விதமாக தன்னை இக்கொலையுடன் சம்பந்தப்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கொலை குறித்த பல மர்ம தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது