வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (07:51 IST)

தேர்தலில் போட்டியா ? இல்லையா ? – மழுப்பும் ஸ்டாலின் மகன்

சமீபகாலமாக அரசியல் நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வரும் உதயநிதி ஸ்டாலின் தனது அரசியல் பயணம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.

திமுக வின் தற்போதைய தலைவர் ஸ்டாலினின் மகனும், முன்னாள் தலைவர் கலைஞரின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின் சினிமா தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அனைவருக்கும் தெரிந்த முகமாகியிருக்கிறார். இதையடுத்து சமீபகாலமாக திமுக சார்பில் நடக்கும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். அது மட்டுமல்லாமல் திமுக வின் சீனியர்களை விட உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் ஒரு புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அரசியல் குறித்த கேள்விக்கு மழுப்பலான பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘ நான் திமுக வில் அடிப்படி உறுப்பினராகவே எனது பணியை தொடர்கிறேன்.. முரசொலியின் நிர்வாக இயக்குனராக இருப்பதால்தான் என்னை நிகழ்ச்சிகளுக்காக அனைவரும் அழைக்கிறார்கள். அதை வைத்து நான் தேர்தலில் போட்டியிடப் போவதாக நிறையப் பேர் நினைக்கிறார்கள். எனக்குப் பதவிகளில் விருப்பம் இல்லை. ஆனால் அதுபற்றி இப்போதே முடிவெடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. வருடத்திற்கு ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு அரசியலில் அதிக நேரம் செலவிட போகிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே ஸ்டாலின் திமுக வின் தலைவரானது கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்தினால்தான் என அதிமுக போன்ற கட்சிகள் விமர்சித்து வரும் வேலையில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை மேலும் அக்கட்சியை வாரிசுக் கட்சி எனும் விமர்சனத்தினை நோக்கியேத் தள்ளுகிறது.