1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (10:30 IST)

சீமானுக்கு ஆறுதல் சொன்ன உதயநிதி ஸ்டாலின்

திமுக மாநில இளைஞரணி செயலாளர் , சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

 
திரைப்பட இயக்குனர், விடுதலை புலிகள் ஆதரவாளர், தமிழ் தேசிய ஆதரவாளர் என பலவாறாக அறியப்பட்ட சீமான் 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் எனும் கட்சியை தொடங்கினார். 2016 தேர்தலில் இருந்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகிறார். இன்றைய நிலவரப்படி திமுக, அதிமுகவுக்குப் பிறகு அதிக வாக்குகளை வாங்கியக் கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது. இந்நிலையில் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.
 
சொந்த ஊரில் அவரின் இறுதி சடங்குக்கான பணிகளில் இருந்த சீமானுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அழைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன். தந்தையாரை இழந்து வாடும் அண்ணன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல். ஆழ்ந்த இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.