1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:43 IST)

நெல்லை பள்ளி விபத்து: வேதனையில் டிடிவி!

நெல்லை பள்ளி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என டிடிவி தினகரன் ட்விட்.

 
நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் திடீரென கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியாகியதால் சுற்றி பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,  காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் மேலும், ஒரு மாணவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து தெரிவித்ததாவது, திருநெல்வேலியில் பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அம்மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் விரைவில் முழு நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களில் அலட்சியம் காட்டக்கூடாது என்பதற்கு நெல்லை சம்பவம் ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. இனி வரும் காலத்தில் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.