1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (17:43 IST)

பாஜக, அமமுக கூட்டணி எப்போது? – டிடிவி தினகரன் பதில்!

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அமமுக சார்பில் நாளை நடைபெற உள்ள ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல் வீரர் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ள உள்ளார்.


 
இதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களின் சந்தித்தார்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், ஒன்றிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்திற்காக கோவை வந்துள்ளதாக கூறினார்.

வினாஷ காலே விபரீத புத்தி என்பது போல் அழிய போகிறவர்கள் தான் அடுத்தவர்களை பார்த்து பேசுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்ட அவர் துரியோதனன் கூட்டம் என்றைக்கும் ஜெயித்ததில்லை எனவும் துரியோதனன் கூட்டம் எங்களைப் பார்த்து சொல்வதாகவும் அவர்கள் வீழ்வது உறுதி எனவும் கூறினார்.

அதிமுக ஒன்றிணைப்பு குறித்த சசிகலா கூறியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த,எனக்கு தெரிந்து அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை எனவும் எந்த காரணத்தை கொண்டும் பழனிச்சாமி உடன் அமமுக ஒன்றிணைந்து செல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். ஓபிஎஸ் நடத்தும் நிகழ்ச்சியில் அழைப்பு வந்தால் அது குறித்து யோசிப்போம் என்றார்.

செல்லூர் ராஜு அடுத்த பிரதமர் மோடி தான்,அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என கூறியது குறித்தான கேள்விக்கு,அவர் பேசியதற்கு நீங்கள் அவரிடம் தான்  கேட்க வேண்டும் எனவும் அவர் ஒரு விஞ்ஞானி, விஞ்ஞானியின் பேச்சு சாதாரண மக்களாகிய நமக்கெல்லாம் புரியாது என பதிலளித்தார்.

அமமுக ஓபிஎஸ் நட்பு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நல்ல முறையில் தொடர்வதாக தெரிவித்தார்.

பாஜக அதிமுக பிரிவு குறித்தான கேள்விக்கு இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்தது தற்போது பிரிந்து விட்டது என்று தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

அமமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு, யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் எங்களுடைய நிலைப்பாடுகளை உரிய நேரத்தில் தெரிவிப்போம் என்றார்.