வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (11:44 IST)

உயிரிழந்த விவசாயி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

பயிர் கருகியதால் உயிரிழந்த விவசாயி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் கருகிய தனது பயிர்களை கண்டு மனமுடைந்த விவசாயி திரு.எம்.கே.ராஜ்குமார் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
காவிரி நீரை நம்பி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் ஒருவரான திரு.ராஜ்குமாரின் பயிர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் முற்றிலும் கருகி வீணான நிலையில், சோகம் தாங்காமல் நெஞ்சுவலி ஏற்பட்டு விவசாய நிலத்திலேயே உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
தன் விவசாய நிலத்தில் கருகிய பயிர்களை தானே அழிக்க வேண்டிய சூழல் உருவானதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான நீரை பெற்றுத்தந்து விவசாயிகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran