வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2024 (16:53 IST)

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வாக்குறுதி என்ன ஆச்சு? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

TTV Dinakaran
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது - ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை கடந்த பின்பும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது அரசின் கொள்கை முடிவு எனவும், அது தொடர்பாக பெறப்பட்ட ஆய்வு அறிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் சட்டப்பேரவையில் கூறியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கேள்விகள் எழுவதும், அதற்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாத வகையில் அமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்குவதும் தொடர்கதையாகி வருவது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு தயாராக இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
 
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளை கடந்த பின்னரும் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது ஏன்?
 
சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பாக வழங்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவது எட்டாக்கனியாகவே இருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கொள்கை முடிவை உடனடியாக வெளியிட தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 
 
 
Edited by Siva