சின்னம் கிடைச்சா மட்டும் போதுமா? தொண்டர்கள் வேண்டாமா? – ஆளரவமற்ற அமமுக!
ஒரு பக்கம் நிலையான சின்னம் கேட்டு டிடிவி அலைந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அமமுக சரிந்து வருவதை அவர் கவனிக்க தவறி வருவதாக தொண்டர்கள் குறைபட்டு கொள்கின்றனர்.
ஆர்.கே நகர் தேர்தல் மூலமாக ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் தன் கட்சி பக்கம் திருப்பிய டிடிவி தினகரன், தற்போது தன் செல்வாக்கை இழந்து வருகிறார். அ.ம.மு.கவில் முக்கிய பதவிகளில் இருந்த பலரே வேறு கட்சிகளுக்கு தாவி விட்டத்தில் தோண்டர்கள் ஏக குழப்பத்தில் உள்ளார்கள். இதை வாய்ப்பாக கொண்டு உள்ளூர் மற்ற கட்சி நிர்வாகிகள் அ.ம.மு.க தொண்டர்களை எளிதாக தங்கள் கட்சிகளில் ஈர்த்து கொண்டு வருகிறார்கள். அ.ம.மு.கவினரை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் வகையில் மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிமுக வெளியிட்ட அறிக்கையில் “தாய் கழகத்திற்கு திரும்ப அழைக்கிறோம்” என்று வேண்டுதல் விடுத்திருந்தனர்.
டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகள் பேச்சை, பரிந்துரைகளை கேட்பதில்லை என்ற புகார் நீண்டகாலமாக இருந்து வருகிறது. தற்போது மேட்டூர் பகுதியில் உள்ள மேச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். மக்களவை தேர்தலுக்கு பிறகு நிர்வாகிகள் உட்பட பல்லாயிர கணக்கான அமமுகவினர் வேறு கட்சிகளுக்கு சென்றுள்ளனர்.
சின்னத்திற்காக அலைந்து கொண்டிருக்கும் டிடிவி தினகரன், அதைவிட கட்சிக்கு தொண்டர்கள் முக்கியம் என்பதை மறந்து விட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. காவிரி டெல்டா பகுதிகளை தவிர மற்ற இடங்களில் அமமுக பலமான சரிவை சந்தித்துள்ளது. இதை கவனியாமல் டிடிவி இன்னமுமே இருந்தால் கட்சிக்கு சின்னம் கிடைக்கும். ஆனால் தொண்டர்கள் இருக்கமாட்டார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.