ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (08:55 IST)

உதயநிதிதான் அடுத்த இளைஞரணி செயலாளர் – திருச்சியில் தீர்மானம் !

உதயநிதி ஸ்டாலினை திமுகவின் இளைஞரணி செயலாளர் ஆக்க வேண்டும் என திருச்சி திமுக செய்ற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு அதிமுக வெறுப்பு, பாஜக வெறுப்பு, மோடி எதிர்ப்பு அலை எனப் பல காரணங்கள் அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகின்றன. ஆனால் திமுக வில் உள்ள சிலரோ இந்த வெற்றிக்கு உதயநிதியின் தேர்தல் பிரச்சாரம் தான் காரணம் என சொல்லி வருகின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாகவே தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியை வழங்க வேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் ஸ்டாலினோ ஏற்கனவே சொல்லப்பட்டு வரும் குடும்பக் கட்சி எனும் விமர்சனத்தை மனதில் வைத்து அதற்கு தடை போட்டு வந்தார்.

அதனால் இப்போது கட்சிக்குள் இருந்தே அதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.  நேற்று நடந்த திருச்சி திமுக செயற்குழுவில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ‘முரசொலி நிர்வாக இயக்குநராகத் திறம்பட செயல்பட்டு வருபவரும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது பரப்புரை மூலம் கழக நிர்வாகிகள் மட்டுமல்லாது பொது மக்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடித்த திருமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நமது கழக இளைஞர் அணியை வலுப்படுத்தும் விதமாக மாநில இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை அளித்து அவரது திறமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.

அதனால் விரைவில் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என திமுக வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.