திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (14:03 IST)

நிவர் புயல்: ரயில் & விமான சேவை ரத்து; புதுச்சேரிக்கு செல்லவும் தடை!!

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 27 ரயில்கள், 26 விமானங்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் புயல் கரையை கடக்கும் நிலையில் பல மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் நாளையும் 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 
அதன்படி, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்னும் 6 மணி நேரத்தில் நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 27 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு சென்னையில் இருந்து இயக்கப்படும் மற்றும் சென்னைக்கு வந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
மேலும், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கிழக்கு  கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.