1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 டிசம்பர் 2024 (14:22 IST)

புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! என்ன நடந்தது?

சேலத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் புத்தகத் திருவிழா சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், ஆறாவது நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

மக்கள் குடும்பத்துடன் வந்து புத்தகங்களை வாங்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய அளவுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லை என்ற குறையும் கூறப்பட்டது.

இந்த நிலையில், புத்தகத் திருவிழாவுக்காக எலக்ட்ரீசியன் வேலை செய்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த கலீம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், புத்தகத் திருவிழா நடக்கும் அரங்கின் பின்புறம் அவர் சென்றதாகவும், அப்போது கீழே கிடந்த வயரை தெரியாமல் மிதித்ததால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இது எதிர்பாராமல் நடந்த சம்பவமாகும். மின்சாரம் செலுத்தும் வயர்கள் வெறுமனே கீழே இருந்தது தான் இந்த விபத்துக்கு காரணமாகும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் கூறியபோது, மழையின் காரணமாக மின்சார பழுது பார்க்கச் சென்றபோது தான் இந்த சம்பவம் ஏற்பட்டதாகவும், மின்சாரம் செல்லக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.


Edited by Mahendran