செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2017 (13:09 IST)

ஜெயலலிதாவை உயிரோடு கடைசியாக பார்த்த நாள் இன்று!

ஜெயலலிதாவை உயிரோடு கடைசியாக பார்த்த நாள் இன்று!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவர் கடைசியாக சென்ற வருடம் இந்த நாளில் தான் தனது கடைசி அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.


 
 
தமிழக அரசியலில் ஜெயலலிதா என்ற பெண் சிங்கம் மிகப்பெரிய இடத்தை ஆக்ரமித்து வைத்திருந்தார். அவரது அதிமுக கட்சியை பாராளுமன்றத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உயர்த்தினார். எம்ஜிஆருக்கு பின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார் ஜெயலலிதா.
 
அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் திட்டம், இலவச, மின்விசிறி, மிக்சி, ஆடு, மாடு வழங்கும் திட்டம் என பல்வேறு மக்கள் நல திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் ஜெயலலிதா.
 
அவரது கண் அசைவிற்கும், கட்டளைகளுக்கும் அத்தனை சக்தி உண்டு. சக்தி வாய்ந்த பெண் அரசியல்வாதியாக சிங்கம் போல வலம் வந்தார் ஜெயலலிதா. தனது அரசியல் வரலாற்றில் யாரும் செல்லாத உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சென்ற வருடம் இதே நாள் செப்டம்பர் 21-ஆம் தேதி சென்னையில் மெட்ரோ பயணிகள் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதுவே அவர் கடைசியாக மக்கள் மத்தியில் உயிரோடு தோன்றிய நாள் ஆகும்.
 
அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை.
 
இதனால் ஜெயலலிதாவை கடைசியாக பார்த்த இந்த தினத்தை அவரது அபிமானிகள் சோகத்துடன் சமூக வலைதளங்களில் அனுசரிக்கின்றனர். தமிழக அரசியலில் தனக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கிய ஜெயலலிதா விட்டுச்சென்ற இடத்தை ஒரு வருடம் ஆகியும் இதுவரை யாரும் நிரப்பவில்லை.