செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (08:45 IST)

சென்னை பள்ளிகள் இன்று திறப்பு: மழை தொடர்வதால் மாணவர்கள் அவதி

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் இன்று காலை முதலே பள்ளிகளுக்கு செல்ல தயாராகினர். ஆனால் இன்று காலையும் மழை பெய்ததால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


இன்று காலை சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், ஆழ்வார்ப்பேட்டை, தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் மிதமான மழையும், திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமாரான மழையும் பெய்து வருகிறது. அதேபோல் குரோம்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், பெருங்குடி, நாவலூர், போரூர், சிட்லபாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.

இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு மழையில் நனைந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 8 வரை மழை இருப்பதாக வானிலை அறிக்கை கூறியிருக்கும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவது சரியா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.