செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (19:00 IST)

தமிழக அரசு அனைத்து விளையாட்டுகளிலும் அக்கறை கொள்ள வேண்டும் : விஜயகாந்த் கோரிக்கை

தமிழக அரசு அனைத்து விளையாட்டுகளிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
 
துருக்கியில் சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு போட்டிகள், கடந்த 11-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை நடந்தது. துருக்கியில் கலவரங்கள் நடந்த போதும், விளையாட்டு போட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், போட்டிகளில் பங்கேற்க சென்ற அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டனர் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. 
 
இருப்பினும் இந்தியாவின் சார்பாக 149 மாணவர்களும் முக்கியமாக தமிழகத்தின் சார்பாக 10 பேரும் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாணவர்கள் பல பேருக்கு விளையாட்டில் பங்கேற்க, இந்திய சீருடைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த சீருடைகள் முறையாக வழங்கப்படாததால் பல மாணவர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்பது வேதனைக்குரியது. கிரிக்கெட் துறைக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யும் நமது அரசு, அனைத்து விளையாட்டுகளிலும் அதேபோன்ற அக்கறைகளை செலுத்தி இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
 
எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற குறைகள் ஏற்படாமல் இருக்க விளையாட்டுத்துறை கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.