கொரோனா எதிரொலி! திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடல்!: உஷார் நிலையில் தமிழகம்!
கொரோனா அச்சுறுத்தல் இந்தியா முழுவதும் அதிகரித்துள்ள சூழலில் தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு தற்போது வரை இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியமாக தமிழக எல்லை பகுதிகளான கர்நாடகா, கேரளா, தெலுங்கானா பகுதிகள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மேலும் தமிழகத்தின் பிற மாநில எல்லை மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மால்கள், திரையரங்குகளை மூட சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் தமிழகம் ஒரு பாதுகாப்பு வளையத்திற்கு உட்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைப்பகுதிகளில் வரும் போக்குவரத்து வாகனங்கள் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே உள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.