புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (10:49 IST)

மாணவர்களுக்கு வீட்டுபாடம்: பறக்கும் படை அமைத்து அரசு ஆய்வு!

மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்கப்படுவது குறித்து மாவட்ட வாரியாக பறக்கும் படை அமைத்து ஆய்வு.


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் வீட்டுப்பாடம் அளிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக பள்ளிகளில் பயிலும் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பின்பற்றி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவை சரியாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் இந்த உத்தரவை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆதாரமாக, மாவட்ட வாரியாக பறக்கும் படை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை மாவட்ட கல்வி அதிகாரிகள் யாரும் அது குறித்து தொடக்க கல்வித்துறைக்கு அறிக்கை ஏதும் அனுப்பிவைக்கவில்லை.

எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் கடந்த 3 மாதங்களில் மாவட்டங்களில் ஆய்வு செய்ததை தேதிவாரியாக குறிப்பிட்டு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். பள்ளி வாரியாகவும் வீட்டுப் பாடம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்ற விவரத்தையும் அறிக்கையில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.