வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (14:04 IST)

கர்நாடக காங்கிரஸ் விவரம் புரியாமல் பேசுகிறது! – தமிழக காங்கிரஸ் தலைவர் விளக்கம்!

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் ஆதரவாக பேசியது குறித்து தமிழக காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கூறி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக விவசாயத்திற்கு காவிரி நீர் இன்றியமையாதது என்றும், எனவே மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்திய கடிதத்தை எடியூரப்பாவுக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியுள்ள கர்நாடக காங்கிரஸ் ஒரு மாநிலம் தனது திட்டங்களுக்கு பிற மாநிலத்திடம் அனுமதி பெற தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

கர்நாடக காங்கிரஸின் இந்த கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார் விவரம் தெரியாமல் பேசுகிறார் தண்ணீர் எல்லாருக்கும் பொதுவானதுதான்” என்று தெரிவித்துள்ளார். அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில காங்கிரஸ் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.