கடத்தப்பட்ட பெண் நித்தியின் ஆசிரமத்தில்..? – திருவண்ணாமலையில் அதிரடி ரெய்டு!
சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்த கர்நாடக இளம்பெண் திருவண்ணாமலை ஆசிரமத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிரடி ரெய்டு நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்கி அவருக்கு சேவகம் செய்து வந்தனர். இவரது இரண்டாவது பெண் தவிர மற்ற அனைவரும் ஆசிரமத்தில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், அவரது இரண்டாவது பெண்ணை தொடர்பு கொள்ள நாகேஷால் முடியவில்லை.
ஆசிரமத்தாரும் அதற்கு அனுமதி மறுத்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமங்கள் மீது அதிரடி ரெய்டுகள் தொடர்ந்தன. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நித்யானந்தாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் தப்பி தலைமறைவாக எங்கோ இருந்து வருகிறார்.
இந்நிலையில் மாயமான நாகேஷின் மகள் திருவண்ணாமலை நித்தியானந்தா ஆசிரமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகேஷ் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து நித்தியானந்தா ஆசிரமம் சென்ற போலீஸார் அங்கு அதிரடி ரெய்டை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு நாகேஷின் மகள் இல்லை என சோதனையில் தெரிய வந்துள்ளது.