அதிமுக மூலம் தமிழகத்தில் தாமரை மலரப்பார்க்கிறதா?? திருமா குற்றச்சாட்டு
தமிழக அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. குறிப்பாக இந்த தேர்தல் திமுக, அதிமுக ஆகிய நேர் எதிர் துருவங்கள் தீவிரமாக களமிறங்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த தேர்தலில், அதிமுகவினர் பாஜகவை ஆதரவு தர கோரி வலியுறுத்தியதை அடுத்து, பாஜகவினர் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக கூறினர். இந்நிலையில்இந்த தேர்தலை குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படுவதாக தெரியவில்லை எனவும், அதிமுக வழியாக பாஜக தமிழகத்தில் காலூன்ற பகிரங்க முயற்சி எடுத்துவருவதாகவும் விமர்சித்துள்ளார்.
முன்னதாக தொல்.திருமாவளவன் காஷ்மீர் விவகாரம் குறித்தும், புதிய கல்வி கொள்கை குறித்தும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது இந்த தேர்தலை குறித்த தனது விமர்சனங்களையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.