வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (16:33 IST)

இலங்கை ராணுவத்தினர் திட்டமிட்டே மீனவர்களை கொலை செய்துள்ளனர்: திருமுருகன் காந்தி..!

thirumurugan
இலங்கை ராணுவத்தினர் திட்டமிட்டே நம் குடிமக்களை படுகொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தியுள்ளனர் என மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டின் மீனவர் ஒருவர் இலங்கை கடலோர கடற்படையால் படுகொலையாகியுள்ளார். மற்றவர் நிலை தெரியவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் அறிக்கை வாயிலாக இலங்கை ரோந்து படகு மோதியதில் நம் தமிழ்நாட்டின் குடிமகனான மீனவர் திரு.மலைச்சாமி கொல்லப்பட்டுள்ளார் என்பது உறுதியாகிறது. இது விபத்தல்ல. இலங்கையின் ரோந்துபடகு திசை தெரியாமல் மோதலை செய்யவில்லை. நவீனகருவிகளுடன் செயல்படும் இலங்கை ரோந்துப்படகில் இருந்த இலங்கை ராணுவத்தினர் திட்டமிட்டே நம் குடிமக்களை படுகொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தியுள்ளனர். எனவே இலங்கையின் கடலோர காவற்படையின் மீது கொலை வழக்கினை தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
 
 2021 நவம்பர் 8ம் தேதி  குஜராத்திலிருந்து சென்ற ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே எனும் மராத்திய மீனவரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு கப்பற்படை கொலை செய்ததற்காக அவர்கள் மீது குஜராத் அரசு போர்பந்தர் நவிபந்தர் காவல்நிலையத்தில்  கொலை வழக்கை பதிவு செய்தது. இம்மீனவருடன் காயமடைந்த சகமீனவரின் பெயரில் FIR பதிவு செய்யப்பட்டது. கிட்டதட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. 
 
இச்சம்பவம் நடப்பதற்கு இரு வாரங்களுக்கு முன் 18 அக்டோபர் 2021ல் புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டின மீனவர் ராஜ்கிரண் சென்ற படகை, தற்போது நடந்ததைப் போல, இலங்கை கடற்படை படகை கொண்டு மோதி, ராஜ்கிரணை கைது செய்து சித்தரவதை செய்து கொலை செய்தனர்.
 
 இச்சமயத்தில் ராஜ்கிரண் கொலைக்கு வழக்கை பதிவு செய்ய வேண்டுமெனும் நீதிக்கான போராட்டத்தில் எங்கள் அமைப்பும், நானும் நேரடியாக களத்தில் மீனவர்களுடன் போராடினோம். ஆனால் எவ்வித வழக்கும் இலங்கை கடலோரகாவற்படை மீது பதியப்படவில்லை. இச்செய்தியை  தெரிவித்து மக்கள் கண்காணிப்பகம், மீனவர் காப்போம் ஆகிய அமைப்புகளின் முயற்சியில் நீதிமன்றம் பிணக்கூறாய்வை செய்ய உத்திரவிட்டதன் பிறகே தமிழ்நாடு காவல்துறை புதைக்கப்பட்ட ராஜ்கிரண் உடலை தோண்டியெடுத்து பிணக்கூறாய்வை நடத்தியது. ஆனால் இந்த உரிமைக்காக போராடிய என் மீது வழக்கை பதிவு செய்த தமிழகக் காவல்துறை, இலங்கை கடற்படை மீது வழக்கை பதிவுசெய்யவில்லை. அதேசமயம்  கோட்டைப்பட்டிணத்தில் போராடும் மீனவர்களிடத்தில், கொலை செய்த் இலங்கையை குற்றம்சாட்டாமல், கொலைக்கான காரணமாக  திமுகவை குற்றம்சாட்டி திசைதிருப்பி, குழப்பம் கொண்டுவர  முயன்ற பாஜகவினர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கை பதிவு செய்யவில்லை என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 
 
இந்நிலையில் இந்திய அரசின் தோல்வியாலும், இலங்கை அரசின் அராஜக போக்கினாலும் நம் குடிமகன் படுகொலையாகி உள்ளார். ஆகவே இச்சமயத்திலாவது கொலை வழக்கையும், பிணக்கூறாய்வையும் செய்திட வேண்டுமெனும் கோரிக்கையை மே17 இயக்கம் சார்பாக வைக்கிறோம். இவ்வாறு கொலை வழக்கை பதிவு செய்யும்பட்சத்தில் எதிர்காலத்தில் மீனவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது மட்டுமல்லாமல், கொலையாளிகள் இந்தியா வரும்பட்சத்தில் கைது செய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டலாம். ஆகவே உறுதியான முடிவெடுக்கும்படி மாண்புமிகு முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.
 
Edited by Siva