திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (08:51 IST)

திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அந்த இயக்கத்தின் சார்பில் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

மே பதினேழு இயக்கம் தொடர்பான சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டு வரும் சூழலில், மே 17 இயக்கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் (fb.com/mayseventeenmovement) மட்டுப்படுத்தப்பட்டு, அதில் பதிவிடப்படும் பதிவுகளை அப்பக்கத்தை பின்தொடர்பவர்களுக்கு காட்டப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்த மே 17 இயக்கத்தின் யூட்யூப் சேனல் நீக்கப்பட்டு, பல முக்கிய காணொளிகளை இழந்துள்ளோம். மே 17 இயக்கத்தின் பல முக்கிய தோழர்களின் கணக்குகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டும், மட்டுப்படுத்தபட்டும் வருகின்றன.

அதே போல், தோழர் திருமுருகன் காந்தியின் தனிநபர் கணக்கை 3 முறை தடை செய்ததோடு, தற்போது தனக்கான தனிநபர் கணக்கை உருவாக்குவதை கூட முகநூல் தடுத்து வைத்துள்ளது. தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கின் இணைப்பை கூட தடுக்கப்பட்ட (Blocked) இணைப்பு என்று கூறி, டிவிட்டர் கணக்கின் இணைப்பை பகிர்வதையும் முகநூல் தடுத்து வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தோழர் திருமுருகன் காந்தி 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

மே 17 இயக்கத்தை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், மே 17 இயக்கத்தின் கருத்துக்கள் மக்களை சென்றடையக் கூடாது என்ற நோக்கத்தை கொண்டே நடத்தப்படுகிறது. மே 17 இயக்கத்தின் கருத்துக்கள் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை உண்டாக்குகிறது என்பதே இதற்கு காரணம். மே 17 இயக்கம் செயல்படுவதற்கான வெளியை சுருக்குவதன் மூலம், அமைப்பை முடக்கிவிடலாம் என்று பாஜக அரசு தப்புகணக்கு போடுகிறது. இது அப்பட்டமாக கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். ஜனநாயக நாட்டில் கருத்துரிமையை தடுப்பது, நாடு பாசிசத்தின் பிடியில் இருப்பதையே காட்டுகிறது.

இந்திய முகநூல் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி ஆர்எஸ்எஸ்-பாஜக தொடர்புடையவர் என்பதையும், டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணமாக முகநூல் இருந்தது என்பதையும் மே 17 இயக்கம் அம்பலப்படுத்தி இருந்தது. பின்னர் அவர் பதவி விலகினாலும், மோடியின் நெருங்கிய நண்பரான அம்பானியின் நிறுவனத்தில் முகநூல் முதலீடு செய்த பின்னர், முகநூல் முழுக்க இந்துத்துவ சார்பான நிலைக்கு சென்றுவிட்டது. அதே போன்ற நெருக்கடி, தற்போது டிவிட்டர் நிர்வாகத்திற்கும் ஏற்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து சில ஹேஷ்டேக்களையும், கிட்டத்தட்ட 1200 கணக்குகளையும் முடக்க பாஜக அரசு சார்பாக சில நாட்கள் முன்னர் வலியுறுத்தப்பட்டது. டிவிட்டர் நிர்வாகம் அதற்கு இணங்காத நிலையில், டிவிட்டர் சமூகத்தளம் இந்தியாவில் தடை செய்யப்படும் என்றளவில் மிரட்டப்பட்டது. அதன் விளைவே, பாஜக அரசிற்கு எதிராக கருத்துக்களை கூறும் நபர்களின் கணக்குகளை முடக்க டிவிட்டர் முனைந்துள்ளது. அதில் தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கும் இருந்துள்ளது.

பாஜக அரசின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் மே 17 இயக்கத்தின் செயல்பாட்டை என்றுமே முடக்கப்போவாதில்லை. மக்களை சென்றடைவதற்கான அனைத்து வழிமுறைகளையும் மே 17 இயக்கம் மேற்கொண்டு, எமது கருத்துக்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீரியமாக மக்களிடையே கொண்டு செல்லும். பாசிசத்தின் பிடியிலிருந்து சமூக வலைத்தளங்களை விடுவித்து சாமானியனின் கருத்துரிமையை உறுதி செய்ய முற்படும் என்று மே 17 இயக்கம் உறுதியளிக்கிறது.