புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்..! ரவுடிகளுக்கு காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை..!
இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகர ஆணையராக பதவியேற்றுள்ள அருண் எச்சரித்துள்ளார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடம் மாற்றப்பட்டு, சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆணையராக பதவியேற்ற பின் , முதல் முறையாக செய்தியாளர்களுக்கு அளித்த அருண், சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணியாகும் என்றார்.
நடந்த குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இனி குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் எனவும் அருண் தெரிவித்தார்.
பொத்தம் பொதுவாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்லக் கூடாது என குறிப்பிட்டு அவர், குற்றங்களை கண்டுபிடிக்க, போக்குவரத்து சிக்கல்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்த முதலமைச்சரின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்தார்.