செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (08:33 IST)

சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பே இல்லை! சொல்பவர் யார் தெரியுமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் இரண்டு வருட தண்டனையை முடித்துவிட்டு இன்னும் இரண்டு வருடங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது அவர் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாக நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இதனால் அதிமுக வட்டாரங்களிலும் தமிழக அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் சசிகலா மீது பரபரப்பான பல புகார்களை முன்வைத்த முன்னாள் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா ஐபிஎஸ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'நன்னடத்தை அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு பல்வேறு விதிகள் உள்ளதாகவும், சசிகலாவின் வழக்கை பொறுத்தவரை, அந்த விதிகளுக்குள் வராது என்றும், எனவே, முன் கூட்டியே சசிகலா விடுதலை என்பது குறித்த கேள்வியே எழவில்லை என்றும் தனது டுவிட்டரில் ரூபா ஐபிஎஸ் அவர்கள் கூறியுள்ளார். 
 
மேலும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் நன்னடைத்தையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும், அதுமட்டுமின்றி சிறையில் சிறப்பு சலுகைகள் பெற டிஜிபிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு, சசிகலாவுக்காக தனி சமையலறை, சிறப்பு அறைகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடந்து கொண்டிருப்பதால் சசிகலா நன்னடைத்தையில் விடுதலையாக வாய்ப்பே இல்லை என்றும் கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.