செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (20:20 IST)

திங்கட்கிழமை முதல் சினிமா காட்சிகள் ரத்து - திரையரங்குகள் முடிவு

தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்துக் காட்சிகளையும் ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழ்நாடு திரையரங்க வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.


 

 
இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஏற்கனவே நலிவடைந்துவரும் இந்தத் தொழிலில் தமிழக அரசு 30 சதவீதம் நகராட்சி வரியாக செலுத்த வேண்டும் என்று புதிதாக அரசாணை வெளியிட்டிருப்பதாகவும், இதனால் இரட்டை வரி விதிப்புமுறைக்கு ஆளாகி பெரும் நஷ்டத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
 
கேரள மாநிலத்தில் ஆளும் அரசு நகராட்சி வரி வேண்டாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளதாகவும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
தமிழக அரசாங்கத்துடன் சுமூக தீர்வு எட்டப்படும் வரை சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வழக்கமான விலையில் திரையரங்குகளில் டிக்கெட் விற்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்படாத பட்சத்தில் திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இறுதியாக, சினிமா டிக்கெட் கட்டணங்களை திரையரங்குகளே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அபிராமி ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அதே நேரத்தில், ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. வரியை ஆதரிப்பதாகவும் ராமநாதன் தெரிவித்தார்.