பாலியல் தொல்லை கொடுத்த மகன்..! அடித்துக் கொன்ற தாய்..!!
கடலூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்த மகனை, தாயே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சாந்தி (52). இவரது கணவர் ஆனந்தன் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் மகன் குணசீலனுடன் வசித்து வருகிறார். குணசீலன் டிப்ளமோ படித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் குணசீலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் இரவு நேரத்தில் குடித்துவிட்டு வந்து தாய் என்றும் பாராமல் சாந்திக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து சாந்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததனால் ஆத்திரம் அடைந்த சாந்தி, குணசீலனை அடித்து கீழே தள்ளி அருகிலிருந்த மண்வெட்டியை கொண்டு தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆய்வாளர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குணசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் தொல்லை கொடுத்ததால் பெற்ற மகனையே தாய் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.