1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (13:10 IST)

கோவிலை நம்பி வாக்குகள் பெற முயற்சி.! இறுதியாக ராமனை நம்பி இருக்கிறார் பிரதமர்!! கீ.வீரமணி.

veeramani
கோவிலை நம்பி வாக்குகளை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டிருக்கிறார்  என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
 
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவிலை நம்பி வாக்குகளை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டிருக்கிறார் எனவும் அதை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்க இந்தியா கூட்டணி தயாராகிக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.  
 
நாடாளுமன்ற பிரச்சனையில் பிரதமர் வாய் திறக்கவில்லை, குறிப்பாக தமிழகத்தில் நடந்த பேரிடரை கண்டுகொள்ளவில்லை, ஆனால் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு சிறிய பிரச்சனை என்றாலும் கூட ஆயிரம் கோடியை வழங்குகிறார்கள் என்று வீரமணி விமர்சித்துள்ளார்.

எந்த வகையிலும் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் பக்தி மாத்திரையின் மூலமாக தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து மீண்டும் வரலாம் என இறுதியாக ராமனை நம்பி இருக்கிறார், அதனால் தான் அவசரகதியில் ராமன் கோவிலை கட்டி திறக்க இருக்கிறார் என்று அவர் கூறினார்.
 
இதுவரை இந்தியா மட்டுமல்ல எந்த நாட்டிலும் கோவிலுக்காக பிரதமர் அடிக்கல் நாட்டி, அதனை திறந்து யாரும் பார்த்தது இல்லை. இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும், இந்த அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படுமே தவிர வேறு இல்லை என்றும் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தான் உண்மையான ஜனநாயகம் என்றும் கீ.வீரமணி தெரிவித்தார்.