1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (13:10 IST)

மயானத்தை அழித்து மைதானம் கட்ட திட்டம்! பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு!

Tribal Peoples
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் பகுதியில், விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை  மூலம் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு பூமி பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. முன்னிலையில் நடைபெற்றது.


 
இதனைத் தொடர்ந்து, விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை கையகப்படுத்தும் பணிகள் பகுதி மக்களை கலந்து ஆலோசிக்காமல், நடைபெற்று வருவதாகவும், இதற்காக சுமார் 40க்கும் மேற்பட்டவர்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து ஜேசிபி மூலம் பணிகள் நடந்து வருவதாகவும் கடந்த வாரம் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அருகில் உள்ள பட்டியல் இனத்தவருக்கு சொந்தமான  மயான பகுதியையும் ஜேசிபி யை வைத்து கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு மயானம் இல்லாததால் இறுதி சடங்குகள் செய்வதில் மிகவும் சிரமப்படுவதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனிடம், உள்ளூர் கட்சியினர் மூலம் கோரிக்கை வைத்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என பதில் சொல்வதாகவும், ஆகையால் உயிரை கொடுத்தாவது  எங்களுக்கு உரிமையான மயானத்தை பாதுகாப்போம் என கூறுகின்றனர்.

மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடத்திலும் மனு கொடுத்துள்ளதாகவும், அடுத்த கட்டமாக எங்கள் மக்களை ஒன்று திரட்டி போராட போவதாகவும் தெரிவித்தனர்.

அலங்காநல்லூர் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், ஆளு கட்சியின் மீது பொதுமக்கள் மிகவும் வெறுப்பில் உள்ளதாகவும் இது வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் வாக்குகள் மூலம் ஆளும் கட்சியினருக்கு பதிலடி கொடுப்போம் என, இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.