வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (07:59 IST)

குணா குகை உள்ளிட்ட கொடைக்கானல் சுற்றுலா பகுதிகள் திடீர் மூடல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட் அறிவிக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் ரெட் அலர்ட், பிறப்பிக்கப்பட்டாலும், பொதுமக்கள் அதற்காக பீதியடைய தேவையில்லை என்றும், இது நிர்வாக ரீதியாக முன்னெச்சரிக்கை எடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்புதான் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது
 
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சுற்றுலா தலங்கள் யாவும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பைன் மரக்காடுகள், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு வருவதை தவிர்க்கவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த விடுமுறையை பயன்படுத்தி கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல சிலர் திட்டமிட்டுள்ளதால் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பருவமழை தீவிரம் குறைந்த பிறகு இன்னும் ஒரு சில நாட்களில் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது