ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்
அருணாச்சல பிரதேசத்தின் திராங் பகுதியிலுள்ள போம்டிலா அருகே இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, காலை 9:15 மணிக்கு விமானக் கட்டுப்பாட்டு அறையுடமான தொடர்பை இழந்து விபத்தில் சிக்கியது.
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரை தேடும் பணிகள் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் பகல் 12 30 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து புகை வந்து கொண்டிருந்த நிலையில் அதில் பயணம் செய்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உடல் கருகி உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் வுவிவி பிரட்டி மற்றும் ஜெயந்த் என்றும் தெரியவந்தது. இதில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவர் வீரர்கள் இருவருக்கும் முழு ராணுவ மரியாதை செய்யப்பட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இன்று மேஜர் ஜெயந்தின் உடல் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன், அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி மரியாதை செலுத்தினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அருணாச்சல பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.