வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2024 (16:32 IST)

புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கம்.! ஹேமா கமிட்டி குறித்து வைரமுத்து கருத்து.!!

vairamuthu
புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கமாகத்தான் ஹேமா கமிட்டியை பார்க்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.  
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி, சென்னை தி.நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து நேரில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹேமா கமிட்டி என்பது எல்லா மாநிலங்களிலும், எல்லா துறைகளிலும் முக்கியமாக அமைக்கப்பட வேண்டிய அமைப்பு என்றார். திரைத்துறையில் மட்டுமல்ல, நாட்டின் எல்லா துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுகிறார்கள் என்றும் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என குறிப்பிட்ட வைரமுத்து, அவற்றிலிருந்து முற்றும் விடுபட வேண்டுமென்றால், பெண்மையில் இருக்கிற பெண்ணை என்ற ஒரு கருத்தை நீக்கிவிட வேண்டும் என்று கூறினார்.
 
ஆணுக்கு ஆண்மை என இருப்பதும், பெண்ணுக்கு பெண்மை என பிரிக்கப்படுவதும் நாட்டில் வேதங்களை ஏற்படுத்துகிற மதிப்பீடுகள் என்று அவர் தெரிவித்தார். ஆணும் பெண்ணும் சரி சமம் தான் என்றும் இதில் யாரும் யாரையும் சீண்டுவது என்பது ஒரு பாலினம் பலவீனமானது என்பதைக் காட்டுவதாக உள்ளது என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

 
இந்திய பள்ளிக்கல்வித்துறை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பயிற்சியை கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கமாகத்தான் ஹேமா கமிட்டியை பார்க்கிறேன் என்று வைரமுத்து குறிப்பிட்டார்