1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2017 (18:19 IST)

விஷாலை விளாசும் தங்கர்பச்சான்: பெண்ணின் உடலை சந்தைப்படுத்துவதா?

விஷாலை விளாசும் தங்கர்பச்சான்: பெண்ணின் உடலை சந்தைப்படுத்துவதா?

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகிவிட்ட விஷால் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் இருந்து ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.


 
 
இந்நிலையில் விஷாலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இயக்குநரும், தயாரிப்பாளருமான தங்கர்பச்சான் சில நாட்களுக்கு முன்னர் பல கேள்விகளை சரமாரியாக விஷாலை நோக்கி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்து தங்கர் பச்சான் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் தயாரிக்கப்படுகிறது. அதில் ஒரு படம்கூட விவசாயிகளின் சிக்கலையும், அவர்களின் வாழ்வியலையும் பேச மறுக்கிறது. திரைப்படக் கலையை பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருபவர்களால் எவ்வாறு விவசாயிகளின் பிரச்சனை பற்றி மட்டும் கவலை கொள்ள முடிகிறது எனத் தெரியவில்லை.
 
ஒரு வேளை அது உண்மையான கவலையாக இருந்தால் ஒவ்வொரு கதாநாயக நடிகரும் ஆண்டுக்கு ஒரு மாதத்தை ஒதுக்கி சமூக நலன், முன்னேற்றம் குறித்து  சிந்தித்து ஒரு படமாவது நடித்திருப்பார்கள். இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் அதற்கு மேலும்கூட கதாநாயகர்களாக இருக்கும் நடிகர்களும் ஒரே ஒரு படத்தில்கூட விவசாயிகள் குறித்து கவலைப்பட்டதில்லை.
 
விஷால் மனது வைத்திருந்தால் அவர் அறிமுகமாயிருக்கிற இந்த பதினைந்து வருடங்களில் தமிழகர்கள் சந்தித்த பல்வேறு  பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று  குறித்து ஒரு படமாவது நடித்து இருப்பார். விஷால்தான் கதையை தேர்வு செய்கிறார். கதாநாயகிலிருந்து தயாரிப்பாளர்வரை அவர் எடுக்கும் முடிவுதான் எனும்போது இதைச் செய்ய எந்த தடையுமில்லை.
 
ஈழத் தமிழர்களின் துயரம், போராட்டம் குறித்த தாய் மண் என்னும் கதையை நான் அவரிடம் சொல்லி அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக இருந்த போதும் ஏனோ அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
 
உண்மையிலேயே இப்போது  விஷால் எதையாவது விவசாயிகளுக்கும்,அவருக்கு வாழ்வு தந்த திரைப்படத்துறைக்கும் செய்யவேண்டும் என்று நினைத்தால் இந்த கோரிக்கையை செயல்படுத்தட்டும்.
 
முதலில் விவசாயிகளின் அடிப்படை பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்யுங்கள். அவைகளை புரிந்த பின் உங்களுக்கு தெரிந்த நடிப்புக் கலையின் மூலம் அவர்களின் போராட்ட வாழ்க்கையான பிரச்சனைகளை உலகிற்கு திரைப்படங்கள் மூலம் தெரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.
 
திரைப்படக்கலை உருவாகி நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் உலகம் முழுக்க அந்த பகுதி மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் சிக்கல்களையும் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் இன்னும் நடைமுறைக்கு உதவாதபடி கதாநாயகன்  என்கிற பேரில் வன்முறைகளை விதைத்துக் கொண்டும், பெண்ணுடலை சந்தைப்படுத்தி ஆடவிட்டுக் கொண்டும் அடுத்த தலைமுறைகளைக்கூட தப்பிக்கவிடாமல்  பொய்யான உலகத்தில் சிக்க வைத்து இயல்பான திரைப்படம் ஒன்றைகூட உருவாக்காமல் இருக்கிறீர்கள். அதற்காக முதலில் நீங்கள் இது பற்றி மட்டும்   கவலைப்படுங்கள் என காட்டமாக கூறியுள்ளார்.