எனக்கு துணைமுதல்வர் ஆசையா ? – பதிலளித்த தங்கமணி

Last Modified புதன், 31 ஜூலை 2019 (09:07 IST)
அதிமுக தலைவர்களில் முக்கியமானவராகவும் முதல்வருக்கு நெருக்கமானவராகவும் இருக்கும் தங்கமணிக்கு துணை முதல்வர் பதவி மேல் ஆசை வந்துள்ளதாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிந்திருந்த அதிமுக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் ஒன்றுசேர்ந்தபோது அதற்கு இரட்டைத் தலைமை இருக்கும் விதமாக இருவருக்கும் அதிகாரங்கள் பிரித்து அளிக்கப்பட்டன. ஆனால் ஓபிஎஸ்-ஐ விட தங்கமணி மற்றும் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள்தான் ஈபிஎஸ்-க்கு நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களிடம் எந்த ஆலோசனைகளையும் ஈபிஎஸ் கேட்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தங்கமணிக்கு துணை முதல்வர் பதவி மேல் ஆசை வந்துள்ளதாக தினகரன் நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டது. மேலும் அதனால்தான் அவர் ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக கட்சிக்குள் வேலைகளை செய்துவருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று மாலை வேலூரில் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டபோது இதற்குப் பதிலளித்தார்.

அப்போது ’கட்சியின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு செய்தியை வெளியிட்டு அதன்மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். அம்மா கொடுத்த பதவியில் மட்டுமே நான் இருந்து வருகிறேன். கட்சியைக் காப்பதே எனது பணி. வேறு எந்தப் பதவிக்கும் ஆசைப்படுபவனில்லை இந்த தங்கமணி’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :