தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் அமைக்க ஆளுநர் முதல்வருடன் ஆலோசனை?
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்துவேன் என கூறியுள்ளார்.
தமிழக ஆளுநராக கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித் தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார். கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் ஆளுநர் தொடர்ந்து மாவட்டம் வாரியாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திமுகவினர் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு சென்று அவருக்கு கருப்பு கொடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் நேற்று நடந்த விழா ஒன்றில் தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 258-வது பிறந்த நாள் விழா மற்றும் தியாகராஜ சாமிகளின் 250-வது ஆண்டு விழா அகில இந்திய தெலுங்கு அமைப்பின் சார்பில் சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழில் பேசினால் தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க முடியும். ஆந்திர மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகள் இருக்கும்போது, தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் இருப்பதில் எந்த தவறும் இல்லை. தெலுங்குப் பள்ளிகள் அமைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்துவேன் என்று கூறியுள்ளார்.