திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (09:47 IST)

சுருக்குவலை போட்ட விவகாரம்: நடுக்கடலில் மோதிக்கொண்ட மீனவர்கள்!

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட மீன் வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததாக இரு கிராமத்து மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் எழுந்துள்ளது.

தமிழக மீனவர்கள் கடல்பகுதியில் மீன்பிடிக்கும்போது அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. வங்க கடலில் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அந்த வழியாக சென்ற வெள்ளப்பள்ளம் மீனவர்கள் கீச்சாங்குப்பத்தினர் தடை செய்யப்பட்ட சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக வெடித்துள்ளது. நடுக்கடல் என்றும் பாராமல் படகுகளில் இருந்த கற்களையும், பாட்டில்களையும் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் இரு தரப்பிலும் 17 பேர் காயமடைந்தனர்.

கீச்சாங்குப்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளப்பள்ளம் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்த பிறகு கலைந்து சென்றுள்ளனர்.

சினிமா பாணியில் நட்ட நடுக்கடலில் மீனவர்கள் இடையே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் இரு கிராமங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.