1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (08:11 IST)

மாணவர்களுக்கு தடுப்பூசி; நேரடியாக பள்ளிகளில் முகாம்! – தமிழக அரசு திட்டம்!

இந்தியா முழுவதும் 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தவும், 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 முதல் தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படும்.கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை செலுத்திக்கொள்ளலாம் என்பதால், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.