ரஜினிக்கு வலை விரிக்கும் பிரபல கட்சிகள்- ரஜினி ஆதரவு யாருக்கு?
ரஜினி எப்போது கட்சியை தொடங்குவார்? என அவரது ரசிகர்கள் மட்டுமல்ல பிரபல கட்சிகளே ஆர்வமாக இருக்கின்றன. ரஜினியை தங்கள் கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள பிரபல கட்சிகள் பேசி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
தற்போது தமிழக அரசியலில் கட்சி தாவலும் கூட்டணி தாவலும் மிக வேகமாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் எப்படியும் ரஜினி தனது கட்சியை சட்டசபை தேர்தலுக்கு முன் தொடங்கி விடுவார். அப்படி தொடங்கினாலும் உடனே அதை பிரபலப்படுத்தி வாக்குகளை அதிகரிப்பதில் அதிக சிக்கல் உள்ளது.
இதை காரணமாக வைத்து அவரிடம் எப்படியாவது பேசி தங்கள் கட்சி கூட்டணியில் இணைத்துவிட பல கட்சிகள் இப்போதே பேசி வருகின்றன. ரஜினிக்கு திமுக, அதிமுக இரண்டு கட்சிகளோடும் சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. கலைஞரை கூட வெகுவாக மதித்தார் ரஜினிகாந்த். ஆனால் ஜெயலலிதாவுக்கும், ரஜினிக்கும் இடையேயான பிரச்சினை அப்படியில்லை.
1984ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வர் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவுக்கும், ரஜினிக்கும் இடையே ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள் இருந்தன. நேரடியாக செயல்பட முடியாத நிலையில் அப்போது பாமகவில் இருந்த பண்ருட்டி ராமசந்திரனை அழைத்து “அடுத்த ஆட்சி அதிமுகவுடையதாய் இருக்க கூடாது. அதற்கு தேவையான ஆதரவை நான் தருகிறேன்” என ரஜினி கூறியதாய் பன்ருட்டி ராமசந்திரனே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அப்படியிருக்க அதிமுக கூட்டணியில் ரஜினி இணைவாரா என்றால், ரஜினிக்கு ஜெயலலிதாவுடன்தான் பிரச்சினையே தவிர அதிமுகவோடு அல்ல. மேலும் அவரது நண்பர் மோடியின் பாஜக ஆதரவு அதிமுகவுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பக்கம் திமுகவை எடுத்து கொண்டால், கலைஞருக்கு விழா எடுத்த போது நடிகர் அஜீத் “விழாவுக்கு வர சொல்லி எங்களை மிரட்டுகிறார்கள்” என சொன்னதற்கு ரஜினி எழுந்து கைதட்டியதை தவிர வேறு எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. ரஜினி நடித்த சிவாஜி படத்தின் வெற்றிவிழாவில் பேசிய அன்றைய முதல்வர் கருணாநிதி “இந்த நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) பல தொலைவுகள் கடந்து சூரியனிடத்திலே (திமுக) வந்து சேர்ந்துவிட்டது” என்று அப்போதே சூசகமாக பேசியுள்ளார். அப்போதிருந்தே ரஜினியின் ஆதரவை பெறுவதற்கு திமுக தயார் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.
எது எப்படியிருந்தாலும் தனது சக நடிகரான கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து மக்களவை தேர்தலில்கூட கூட்டணி இல்லாமல் சீராக பயணித்து கொண்டிருக்கிறார். இந்த கட்சிகளின் ஆட்சி சரியில்லை என்று சொல்லிதான் புதிய கட்சி ஆரம்பிக்கிறார் ரஜினி. அப்படியிருக்க கட்சி ஆரம்பித்ததுமே அவர்களோடு போய் சேர்ந்தால் கட்சிக்கு ரொம்ப கெட்ட பெயராக போய்விடும் என ரஜினி யோசிக்கலாம்.
எனவே ரஜினி சட்டசபை தேர்தலை தனித்து நின்று வெற்றிபெறவே வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. மத்தியில் உள்ள அவரது நண்பர் தலையிட்டால் சில மாற்றங்கள் நடைபெறலாம்