1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (10:54 IST)

தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்துவோம்! – எல்.முருகனுக்கு காவல்துறை அனுமதி!

தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்த அரசு தடை விதித்த நிலையில் திருத்தணிக்கு வேல் யாத்திரை புறப்பட்ட எல்.முருகனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், மீறி யாத்திரை நடத்த முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அரசின் உத்தரவை மீறி திருத்தணியில் பாஜகவினர் கூட வாய்ப்புள்ளதால் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் திருத்தணிக்கு வேல் யாத்திரை புறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி புறப்பட்ட அவரை நசரத்பேட்டை அருகே காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். காவலர்களுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் எல்.முருகனோடு 5 வாகனங்கள் மட்டும் செல்ல காவல் துறை அனுமதித்ததாகவும், மற்றவர்களை திரும்ப செல்ல அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு தடை விதித்த நிலையிலும் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடைபெறும் என எல்.முருகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.