1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (16:26 IST)

ஊரடங்கு குறித்த பார்வேர்டு மெசேஜுகளை நம்ப வேண்டாம் – தமிழக சுகாதாரத்துறை!

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்க இருப்பதாக வரும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் கடந்த சில வாரமாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று பேசிக் கொள்ளப்பட்டது.

ஆனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் போலி செய்தி ஒன்று வலம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 தொடங்கி 30 வரை ஊரடங்கு அமல்படுத்தப்போவதாகவும், அப்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்றும் ஒரு பட்டியலை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை ”தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் வதந்தியே! அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என கூறியுள்ளது.