தமிழக நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்! – பருவநிலை மாற்ற இயக்கம் அறிவித்த தமிழக அரசு!
உலகம் முழுவதும் பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொண்டு வரும் நிலையில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.
இதில் பல்வேறு பட்ஜெட் அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து வருகிறார். அதில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்கள் முன்னதாக பருவநிலை மாற்றம் குறித்த ஐபிசிசி அறிக்கையில் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வருங்காலத்தில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.