திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (13:44 IST)

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர் சேர்க்கை! – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகளவு விண்ணப்பித்துள்ளதால் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் பலரும் இளங்கலை படிப்புகளுக்காக தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் கவுன்சிலிங்கில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த நிலையில், ஏராளமான மாணவர்கள் காத்திருப்பில் இருந்தனர். முன்னதாக மாணவர் சேர்க்கையை பொறுத்து அரசு கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பல மாணவர்கள் காத்திருப்பில் உள்ளதால் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கும், சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.