பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது! புரளிகளை நம்ப வேண்டாம்! – அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ள நிலையில் பேருந்து கட்டணம் உயர இருப்பதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. எனினும் குறைவான மக்களே பேருந்துகளில் பயணித்து வரும் நிலையில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் “தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” என தெரிவித்துள்ளார். மேலும் ”அரசு பேருந்துகள் மாவட்டங்களுக்கு உள்ளேயே இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களின் வசதிக்காக மாவட்டத்தின் கடைசி பஸ் நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.