புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (18:23 IST)

சென்னை ஆகப்போகிறது சிங்கார சென்னை – 1001 கோடி மொய் செய்த தமிழக அரசு

சென்னையில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.

இந்த வாரம் சென்னை உருவான 580வது வருடத்தின் நினைவாக “சென்னை வாரம்” கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பிரிட்டிஷ் காலத்து மதராஸாக இருந்தபோதே சென்னையின் அடையாளமாக் திகழ்ந்தது கூவம் நதியும், அடையாறும்தான்! அந்த காலத்தில் படகில் போக்குவரத்து செய்து கொண்டிருந்த நதி இப்போது அருகில் சென்றாலே மூக்கை பொத்தி கொள்ளும் அளவுக்கு கழிவு நீராலும், குப்பைகளாலும் சூழ்ந்துள்ளது.

சென்னையில் உள்ள ஆறுகளை பழைய நிலைக்கு மீட்க பல செயல்திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ஆரம்பம் தரும் வகையில் சென்னையில் உள்ள கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அடையாறில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளை செயல்படுத்த உள்ளது தமிழக அரசு.

இந்த பணிகளுக்காக முதற்கட்டமாக 1001 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கியுள்ளது தமிழக அரசு. இந்த சீரமைப்பு பணிகளை சென்னை ஆறுகள் புனரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் ஆகியவை மேற்கொள்ள இருக்கின்றன.

1001 கோடி ரூபாய் செலவில் தொடங்கும் முதற்கட்ட பணிகள் 2022ல் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் இந்த திட்டத்தை “சென்னை வாரம்” சிறப்பிக்கப்படு நாளில் அறிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.