1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (13:48 IST)

ஆகஸ்டு 1 முதல் தளர்வுகள் என்ன? கட்டுப்பாடுகள் என்ன? – தமிழக அரசு விளக்கம்

மத்திய அரசு ஊரடங்கை நீக்கியுள்ள நிலையில் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பலக்கட்ட ஊரடங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஜூலை 31 உடன் ஊரடங்குகள் முடிவடைவதாக மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தமிழக அரசு ஆகஸ்டு 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது. அதேசமயம் மேலும் சில தளர்வுகளையும் வழங்கியுள்ளது.

காய்கறிக் கடைகள், மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கி வந்த நிலையில் இனி இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட கடைகள் இனி காலை 10  மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிட தடை தொடரும் நிலையில் ஆகஸ்டு 1 முதல் மொத்த இருக்கையில் 50 சதவீதம் பேர் இடைவெளி விட்டு அமர்ந்து சாப்பிட அனுமதி. அதாவது நான்கு பேர் அமரக்கூடிய மேசையில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட வேண்டும்.

அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களையும் ஆன்லைன் டெலிவரி செய்ய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி

குற்றவியல் சட்டம் 144ன் படி பொது இடங்களில் 5 பேருக்கும் மேல் கூடி செல்லக்கூடாது என்ற நடைமுறை ஆகஸ்டு 31 வரை தொடரும்.

இதுவரை அரசு, தனியார் நிறுவனங்களில் 50 சதவீதம் ஊழியர்களை மட்டுமே பணிபுரிய அனுமதித்துள்ள நிலையில் ஆகஸ்டு 1 முதல் 75 சதவீதம் ஊழியர்கள் பணிபுரிய அனுமதி
தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 15 அன்று சமூக இடைவெளியுடன், மாஸ்க் அணிந்து சுதந்திர தினம் கொண்டாடலாம்.

அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும்.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.

இதுத்தவிர கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்த தளர்வுகள் பொருந்தாது. அங்கு முழுவதுமான பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.