1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (14:41 IST)

தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்; 47 பேர் பலி

தமிழகத்தில் தற்போது வரை டெங்கு மற்றும் மற்ற காய்ச்சலால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


 

 
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு பொதுநல வழக்கு மையத்தின் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் கொசு மூலம் பரவக்கூடிய நோய்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு, சிக்கன் குன்யா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானோர் உயிரிழந்தனர். கொசுக்களை ஒழிக்க நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அரசு அதற்கான நடவடிக்கையை பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த மனுவை கடந்த ஜூலை மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் மாவட்ட ரீதியாக டெங்கு மற்றும் சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் பட்டியலை அறிக்கையாக அளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
இந்த வழக்கில் இன்று தமிழக சுகாரத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டெங்குவை தவிர்த்து மற்ற காய்ச்சலுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிக்கன் குன்யாவுக்கு தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.