வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (11:42 IST)

அமைச்சராக ரூட்டு போடும் தமிழிசை? கேட் போடும் ரங்கசாமி? – புதுச்சேரியில் புது திருப்பம்?

Tamilisai Rangasamy
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக பிரமுகர்கள் பலரும் எம்.பி சீட்டிற்கு ரூட் போட்டு வருவதால் தேர்தலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.



இந்தியாவில் கடந்த 2014 முதலாக தொடர்ந்து 10 ஆண்டு காலமாக பாஜக ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. இந்த முறை காங்கிரஸ் வலுவற்று இருப்பதாலும், மாநில கட்சிகளே அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கு செலுத்தி வருவதாலும் பாஜகவே ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் பாஜக பிரமுகர்கள் பலரும் எம்.பி சீட்டுகளுக்கு அடிபோட்டு வருகின்றனர்.

முன்னதாக தமிழக பாஜக தலைவர்களாக பொறுப்பு வகித்த இல.கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் உள்ளிட்டோருக்கு பாஜக ஆட்சியில் ஆளுனர், மத்திய இணை அமைச்சர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. பாஜக தொடர்ந்து வட மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் தென் மாநிலங்களிலும் தங்கள் கட்சியை விரிவுப்படுத்துவதில் குறியாக உள்ளனர்.


இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தமிழக பாஜக பிரபலங்கள் பலர் தமிழ்நாட்டின் முக்கியமான சில தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை சௌந்தர்ராஜனும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க, அவரோ புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி நடப்பதால் அவர்களது கருத்தையும் கேட்க வேண்டும் என சொல்லியிருக்கிறாராம். புதுச்சேரியில் அனைத்திந்திய என்.ஆர் காங்கிரஸுக்காக முதல்வர் ரெங்கசாமியின் ஆட்சி நடந்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக (6), என்.ஆர் காங்கிரஸ் (10) இணைந்து ஆட்சியமைத்தனர்.

இந்நிலையில் முதல்வர் ரெங்கசாமியிடம் இதுகுறித்து ஆலோசிக்க தமிழிசை சௌந்தர்ராஜன் முயன்று வருகிறார். ஆனால் முதல்வர் ரெங்கசாமி பிஸியாக இருப்பதால் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகம் சார்ந்து மத்தியில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக உள்ளார். இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜனும் அமைச்சர் பதவிக்கு டார்கெட் செய்தே காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K