புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (08:04 IST)

'கஜா' புயலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: ஸ்டாலினுக்கு தமிழிசை கோரிக்கை

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட 'கஜா' புயலின் பாதிப்புகள் பெருமளவு இருந்த நிலையில் இந்த பகுதியில் மீட்புப்பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இருப்பினும் புயலால் ஏற்பட்ட பாதிப்பின் அளவு அதிகம் என்பதால் மீண்டும் இந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.

இந்த நிலையில் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் பார்வையிட ஏன் செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் நேரில் பார்வையிடவில்லை என்றாலும் மீட்புப்பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருவதாக ஆளும் கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்றும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதை அரசியலாக்குவது கவலை அளிப்பதாகவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் செயல்பாடுகளை கணக்கிட இது நேரம் அல்ல என்றும் சுயலாபத்திற்காக இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.