சிங்கப்பூர் சென்றதற்குப் பதில் பெங்களூர் சென்று …. ! – ஸ்டாலின் மேல் தமிழிசை விமர்சனம்
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று வந்ததைக் கேலி செய்யும் விதமாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகமெங்கும் தண்ணீர்ப் பஞ்சம் வரலாறு காணாத அளவுக்கு உள்ளது. மக்கள் அன்றாடம் தங்கள் தண்ணீர் தேவைக்காக அலைந்து கொண்டு உள்ளனர். இதற்கு ஆளும் அதிமுக அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்காததேக் காரணம் என சொல்லப்படுகிறது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பாக மக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற்ய் வருகிறது. குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு சென்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று திரும்ப தமிழகம் வந்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டரில் ’சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்... தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டு வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்...சிங்கப்பூர் சென்றதிற்கு பதிலாக பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்று கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம் மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்கு போராடுவதா? இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்...’ எனத் தெரிவித்துள்ளார்.